இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.. தூக்கத்திலே கோரமாக பிரிந்த பெண் உயிர்!
ஆண்டிப்பட்டி அருகே மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (55). இவருக்கு கடந்த 1996-ம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. கட்டிக்கொடுத்து 10 ஆண்டுகள் மட்டுமே நல்ல நிலையில் இருந்த வீடுகள், அதன் பின்னர் உறுதித்தன்மையை இழக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் மேற்கூரை இடிந்து விழுவதும், பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து விழுவதும், மழை பெய்யும் போதெல்லாம் மேற்கூரையில் உள்ள கான்கிரீட் சிமெண்ட் பெயர்ந்து விழுவது என குடியிருப்பவர்கள் அல்லல்பட்டுவந்த நிலையில் ஆண்டுகள் செல்ல செல்ல, வீட்டின் நிலை மோசமாகி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
இந்த சூழலில், இரவு நேரத்தில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், சின்னபொண்ணு இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்,விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் நேரில் வந்து இடிந்த வீட்டை பார்வையிட்டனர்.
இதுகுறித்து வார்டு மெம்பரான நாகர் கூறுகையில், 10 வருடத்திற்கு மேலான கோரிக்கை ஏற்கபடாமல் இருந்த சூழலில் தற்போது உயிரே போய்விட்டது என வேதனை தெரிவிக்கிறார். மழை காலம் நெருங்கியுள்ளதால் தார்பாய்களை கொண்டு மேற்கூரையை மூடி ஆபத்தான முறையில் உயிரை பாதுகாத்து வரும் மக்கள், ஒவ்வொரு நொடியையும் பீதியிலேயே நகர்த்தி வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . இந்த திட்டத்தில் இதே போல 30 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.