மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.. Iron Box-ல் துணி தேய்க்கும்போது விபரீதம்!

திருவள்ளூர் அருகே அயர்ன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் நெமிலி அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (47). கூலித் தொழிலாளியான இவருக்கு மகள் மித்ரா (16), மகன் தீபக்குமார் (14) உள்ளனர். இதில், மித்ரா விடையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தீபக்குமார் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தீபக்குமார் தன் துணிமணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அயர்ன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தீபக்குமார் அலறி துடித்தபடி கீழே விழுந்தார். அவரின் சத்ததை கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள விடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தீபக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஹரிபாபு திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துணிகளை அயர்ன் செய்தபோது, அயர்ன் பாக்ஸ் மூலம் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.