மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் பலி.. காப்பாற்றச் சென்ற தாத்தாவும் உயிரிழந்த சோகம்!

 
Karur

கரூர் அருகே வீட்டில் ஃபேன் ஸ்விட்ச்சை ஆன் செய்த பேரன் மற்றும் தாத்தா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வயலூர் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இன்று காலை வீட்டில் உள்ள ஃபேனின் பிளாக்கினை ஸ்விட்ச் போர்டில் சொருகி ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. 

shock

இதனைக் கண்ட அவரது தாத்தா சீனிவாசன் மற்றும் தாய் ரேவதி ஆகியோர் திருக்குமரனை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனைக் கண்ட திருக்குமரனின் தந்தை தேவராஜ், உடனடியாக மெயின் ஸ்விட்சை ஆப் செய்துள்ளார். 

இதில் மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், திருக்குமரன் மற்றும் அவரது தாத்தா சீனிவாசன் ஆகியோர் மயக்க நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருக்குமரன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Lalapet PS

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தாய் ரேவதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web