சப்பாத்திக்காக 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை.. ஆசாரிபள்ளம் அருகே சோகம்!

நாகர்கோவில் அருகே தனது சப்பாத்தியை அக்கா சாப்பிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தங்ககனி. இந்த தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் என 5 பிள்ளைகள் உள்ளனர். முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். மற்ற இரண்டு மகள்களில் ஒருவர் 12-ம் வகுப்பும், கடைசி மகள் சிவசாந்தினி (15) 10-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். சிவசாந்தினி ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பள்ளி முடிந்து சிவசாந்தினி வீடு திரும்பி இருக்கிறார். அம்மா தங்ககனியிடம், ‘பசிக்கிறது சாப்பிட எதாவது தாருங்கள்’ எனக் கேட்டுள்ளார். சமையல் அறையில் சப்பாத்தி இருப்பதாக தங்ககனி தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவசாந்தினி சமையல் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரின் அக்காள் சப்பாத்தி அனைத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தனக்கு சாப்பிட சப்பாத்தி தரும்படி சிவசாந்தினி கேட்டிருக்கிறார். ஆனால், மீதமிருந்த பாதி சப்பாத்தியையும் அக்காள் சாப்பிட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் சிவசாந்தினிக்கும் அவரின் அக்காவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபித்துக்கொண்ட சிவசாந்தினி வீட்டில் ஓர் அறைக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார். அவர் அம்மாவும், அக்காவும் நீண்ட நேரமாகக் கதவை தட்டியும் திறக்க வில்லை. பதற்றம் அடைந்த அவர்கள், சத்தம்போட்டு அலறியுள்ளனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்துப் பார்த்தபோது அறைக்குள் சிவசாந்தினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியினர் கதவை உடைத்து சிவசாந்தினியை காப்பாற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவசாந்தினி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இது குறித்து அவரின் தாயார் அளித்த தகவலின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவசாந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது சப்பாத்தியை அக்கா சாப்பிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.