நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு ரிசல்ட்! எப்படி பார்க்கலாம் தெரியுமா?

 
Results Results

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை (மே 10) வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,107 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 88 முகாம்களில் நடைபெற்றது. அதன்பிறகு, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

Exam

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் நாளை  (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

govt-exam

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web