பம்ப் செட்டில் குளித்த சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து பலி.. விழுப்புரம் அருகே பரிதாபம்
விழுப்புரம் அருகே வயல்வெளியில் பம்ப் செட் மோட்டாரில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 11 வயதில் 6-ம் வகுப்பு பயிலும் சப்தகிரி என்ற மகன் உள்ளார். இவர்களது உறவினர்களான கலியபெருமாள் - சூர்யா ஆகியோரது 8 வயது மகன் லோகேஷ் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இருவரும் உறவினர்கள் என்பதால் சப்தகிரி மற்றும் லோகேஷ் ஆகியோர் ஒன்றாகவே சுற்றி திரிந்து வந்துள்ளனர்.
இன்று பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் இருவரும் வயல்வெளியில் உள்ள பம்ப் செட் நீர் மோட்டாரில் குளிப்பதற்காக சென்றிருந்தனர். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களுக்கு மேலே சென்ற மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிறுவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மின்சார வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து போலீசார் இரு சிறுவர்களது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மின் வயர் அறுந்து விழுந்தது குறித்து போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மின்வயர்கள் சேதம் அடைந்திருப்பதால் அவற்றை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்திருப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.