ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொம்மன் - பெள்ளி தம்பதியினர் வாழ்த்து பெற்றனர்.
அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் குறும்பட பிரிவில் கலந்து கொண்ட ‘தி எலிபெண்ட விஸ்பர்ஸ்’ படம் சிறந்த ஆவண குறும்படம் என தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியர்களை பாராட்டி தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (15-3-2023) தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.
Love respect & gratitude to Bellie & Bomman our unsung heroes. A humble tribute to all our Mahouts and Cavadis for taking care of our precious elephants like #Raghu & #Ammu. They were honoured & felicitated by CM @mkstalin #TheElephantWhisperers #Oscar #Oscar2023 @CMOTamilnadu pic.twitter.com/iVCp2icVpF
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 15, 2023
கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு முதல்வர் அவர்களின் 2022-ம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மரு. மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இ.வ.ப., புலிகள் காப்பக கள இயக்குநர் திரு. து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.