மக்களோடு மக்களாக வாக்கிங் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மக்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்

 
Tanjore

 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தஞ்சையில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தல் கால கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கியது. இறுதியாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நேற்று (மார்ச் 22) பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை அறிமுகம் செய்து வைத்தார்.

Tanjore

தொடர்ந்து, தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி,நாகப்பட்டினம் வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவருக்கும் வாக்கு கேட்டு கேட்டு இன்று (மார்ச் 23) மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக நேற்று இரவு தஞ்சாவூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார். தொடர்ந்து, இன்று காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில், வேட்பாளர் முரசொலியுடன் நடை பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுடன் செல்ஃபி , வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கிங் வந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து காமராஜ் மார்க்கெட்டுக்கு இன்று வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு கேட்டு விட்டு, கீழ ராஜ வீதியில் உள்ள டீக்கடை ஒன்றில் கட்சியினருடன் டீ குடித்தார்.


பின்னர் தங்கும் விடுதிக்கு வந்த பிறகு 16 விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை ஒன்றிய அரசு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும், தமிழ்நாடு நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

From around the web