பண்பட்ட தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செய்வதறியாது திகைக்கும் விஜய்?

 
MKS Vijay MKS Vijay

ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்திவிட்ட கரூர் ஓலங்கள் ஓய்வதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அரசியல் சாயம் பூசி தங்களின் முதிர்ச்சியற்ற அரசியலை அம்பலப்படுத்தியது விஜய் தரப்பு.

கரூர் நிகழ்ச்சியில் வழக்கம் போல் சிலர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று தான் விஜய் எண்ணியிருக்க வேண்டும். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நின்று கேட்டிருந்தால், உண்மை நிலவரத்தை அவர் அறிந்திருக்கக் கூடும். சென்னையில் விமான நிலைய ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்ததைப் பார்த்தால். வீடு சென்று சேரும் வரையிலும் கரூரில் நடந்த கொடூர மரணங்கள் குறித்து விஜய் க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

30 பேர் மரணமடைந்த செய்தி தெரிந்த பிறகும் இயல்பாக இன்முகத்துடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு மனிதாபிமானமற்றவராக விஜய் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. தன்னுடைய தங்கை மரணம் தன்னை எவ்வாறு பாதித்தது என்று உணர்ந்தவருக்கு மரண ஓலத்தின் கொடூரம் நிச்சயமாகத் தெரியும். வீட்டிற்கு வந்த பிறகு தெரிந்த தகவல்கள் விஜய் யை நிச்சயம் நிலைகுலையச் செய்திருக்கும். ஆனால் அடுத்து என்ன செய்யலாம் என்பதில் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளார் என்று தான் தெரிகிறது.

நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்று விஜய் தரப்பு நினைப்பதற்குள், அரசு தரப்பு வேக வேகமாக செயல்படத் தொடங்கி விட்டது. முதலமைச்சரே இரவோடு இரவாக கரூர் சென்றது, நடந்த கொடூர சம்பவத்தின் மரண ஓலங்களை உலகறியச் செய்து விட்டது. விஜய் யி அடுத்த கட்ட நகர்வுக்கு எதிராக இருப்பது அவருடைய பக்குவமடையாத ரசிகர்களும், அரசியல் முதிர்ச்சியற்ற இரண்டாம் கட்ட ஆலோசகர்களும் தான். அரசுக்கு எதிராக’ திட்டமிட்ட சதி’ என்ற பேச்சுக்கள் ஆளுங்கட்சியை அதிர்ச்சியடையச் செய்தாலும் முதலமைச்சரின் திடமான செயல்பாடுகள் அவரை பண்பட்ட தலைவராக உலகறியச் செய்துள்ளது.

சமூகத் தள அவதூறுகள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஒரணியில் திரண்ட நிலையிலும் மிகவும் கவனத்துடன் தன்னுடைய நிலைப்பாட்டை பக்குவமாக எடுத்து வைத்துள்ளார். முதலமைச்சரின் வீடியோ, விஜய் க்கு ஆதரவாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். இனிமேல் இது போன்ற நிகழ்வு நடக்கக் கூடாது என்பதில் தான் முதலமைச்சரின் கவனம் இருக்கிறது தனிநபர் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன் தன்னுடைய விசாரணையிலும் அதைத் தான் முன் வைக்கிறார்.

விஜய் யை கைது செய்வதற்கோ, அவருடைய அரசியல் கட்சியை முடக்கும் திட்டமோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நடந்த துயரத்திலிருந்து இயல்பு நிலைக்கு மக்களை எப்படி திரும்ப கொண்டு வருவது என்பதில் தான் முதலமைச்சரின் கவனமும் செயல்பாடுகளும் இருக்கிறது. அதே சமயத்தில் 41 பேர் மரணத்திற்கு காரணமான நிகழ்வுக்கு நிச்சயம் போலீசார் விசாரணை, வழக்கு போன்ற நடைமுறைகளை நிச்சயம் நிறுத்தப் போவதில்லை. நடந்த நிகழ்வுகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சட்டப்படி வழக்கை சந்தித்தே தீர வேண்டும். ஆனால் இந்த வழக்கின் போக்கு விஜய் அரசியலை முடக்கிப் போட்டுவிடும், அல்லது பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்படும் என்றெல்லாம் அச்சப்படும் அளவுக்கு இருக்கப் போவதில்லை.

முதலமைச்சரின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து, ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களின் அறிவுரைகளை கேட்காமல், ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தடுத்த நகர்வுகளைச் செய்தால் விஜய் க்கு அரசியல் எதிர்காலம் நிச்சயம் உண்டு.

- ஸ்கார்ப்பியன்

From around the web