சிக்கன் ரைசால் கூடைப்பந்து வீராங்கனை இறக்கவில்லை.. பள்ளி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்

 
Coimbatore

சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கூடைப்பந்து வீராங்கனை உயிரிழக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்தார். ரயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

Dead-body

மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Peravallur PS

இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், கூடைப்பந்து விளையாடும்போது, மாணவியின் வயிற்றிலும் மார்புப் பகுதியிலும் சதை கிழிந்துள்ளது என்று மாணவியின் உடலைப் பரிசோதித்த டாக்டர்கள் தரப்பிலிருந்து காவல்துறையிடம் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவியின் நுரையீரல் செயலிழந்துவிட்டதே உயிரிழப்புக்கு காரணமெனவும், மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வயிற்றில் வலி ஏற்பட்டதால் உடல் உபாதைப் பிரச்சினை எனக்கருதி அவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என போலீசர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த தகவல் மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழப்புக்கான முழு காரணம் குறித்து தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web