இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டும் சென்னை இந்துக் கோவில்!!

வட இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பும் வன்மமும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு எப்போதும் போல் தனித்துவத்துடன் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்து வருகிறது. இந்துக் கோவில் விழாக்களுக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருப்பதும், இஸ்லாமியர்களின் விழாக்கள் போது இந்துக்கள் உதவியாக இருப்பதுவும் காலங்காலமாக தமிழ் மண்ணில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஒவ்வொரு ரம்ஜான் போதும் செய்து வரும் அரும்பணிகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள சூஃபிதர் கோயில் (Sufidar Temple) கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து பரிமாறி வருகிறது. இந்த பாரம்பரியம் 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த சிந்து இந்து அகதியான தாதா ரதன்சந்த் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் சூஃபி புனிதர் ஷாஹென்ஷா பாபா நெப்ராஜ் சாஹிப்பின் போதனைகளை பரப்புவதற்காக சூஃபிதர் அறக்கட்டளையை (Sufidar Trust) நிறுவினார், இது மதங்களுக்கு அப்பாற்பட்ட சேவையை வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு ரம்ஜான் மாதத்திலும், சூஃபிதர் கோயிலைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு (Wallajah Big Mosque) சென்று, நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களுக்கு சைவ உணவாக வெஜிடபிள் பிரியாணி, கொண்டைக்கடலை சாதம், பழங்கள், நோன்புக் கஞ்சி, மற்றும் இனிப்பு வகைகள் வழங்குகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும், பள்ளிவாசலுக்கு வெளியே கூடும் ஏழை இந்துக்களுக்கும் மீதமுள்ள உணவு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் சூஃபிதர் கோயில் தனது பாரம்பரியத்தை தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் இந்தப் பாரம்பரியமிக்க மத நல்லிணக்கத் தொண்டு இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மையை பிரதிபலிக்கும் ஒரு அழகிய எடுத்துக்காட்டாகும்