செம்பரம்பாக்கம் நீர் திறப்பு! சென்னைக்கு ஆபத்தா?
தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையை ஒட்டிய பகுதியில் பெய்த கன மழையால் சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. முக்கியமான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 23.29 அடியை எட்டியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.அடையாறு ஆற்றையொட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
3ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 3 ஆயிரத்து 423 கன அடி நீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையால் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. காலையில் 1000 கன அடியாகத் திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் படிப்படியாகத் திறந்து விடத் திட்டமிட்டுள்ளதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.