கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. தமிழக அரசுக்கு விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு!!

 
Women Achiever Award fucntion

நடப்பு நிதியாண்டில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக HPV (Human Papillomavirus) தடுப்பூசியை செலுத்துவதற்கான திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்திற்கு உலகெங்கிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னையில் நடைபெற்ற  பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தப் போது தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைத் திட்டங்களையும் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் பெரிதும் பாராட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய செளமியா சுவாமிநாதன், தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பொது சுகாதாரத் துறையில் முன்னேறி இருக்கிறது.  தனியாரை விட பொது சுகாதாரத் துறை சிறப்பாக உள்ளது. கேன்சர் அதிகரிக்க வாழ்வியல் முறைகள்தான் காரணம். உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. நல்ல காய்கறிகள், சத்தான பழங்களை நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தவிர்ப்பதற்கு எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக 14 வயதுடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போட உள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது மிகவும் சிறப்பான ஒரு அறிவிப்பு, சிறந்த முன்னெடுப்பும் கூட. இரண்டு தடுப்பூசிகள் மிக முக்கியமானது. ஒன்று எச்பிவி, இது நோய் தடுப்புக்கானது. மற்றொன்று ஹெப்படைடிஸ் பி, இது கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்: என்று கூறியுள்ளார்.