வெடித்து சிதறிய செல்போன்.. இளைஞர் பரிதாப பலி.. பரமக்குடியில் அதிர்ச்சி

 
paramakudi

பரமக்குடியில் செல்போன் வெடித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு தூங்கபோகும் முன்பு  படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்து விபத்து நிகழ்கிறது. அதேபோல் ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது.  இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து  சிதறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் பரமக்குடி நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை புதிய ஆடைகள் வாங்குவதற்காக தனது நண்பர் பாண்டி என்பவருடன் மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

dead-body

ஆடைகள் வாங்கிவிட்டு பைக்கில் பரமக்குடி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலையில் கமுதக்குடி என்ற இடத்தில் வந்தபோது ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக்கில் பின்புறம் அமர்ந்து வந்த பாண்டி பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Police

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web