மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்.. குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. கோவளத்தில் பரிதாபம்!

 
Kovalam

கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பட்டரகரணை அடுத்து உள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (35). இவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பவித்ரா (30). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றரை வயதில் நவனீத் என்ற மகன் இருந்தான். தனசேகரன், தன்னுடைய மனைவி, குழந்தையுடன் வாரம்தோறும் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கொசப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

பவித்ரா, கொசப்பேட்டையில் வாரம் ஒரு முறை புடவை, சுடிதார், நைட்டி போன்ற பெண்களுக்கு தேவையான ஆடைகளை வியாபாரம் செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை கொசப்பேட்டைக்கு தனசேகரன் மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று மதியம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திருப்பி கொண்டு இருந்தார். கோவளம் பேருந்து நிலையம் அருகே மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

Kovalam

அப்போது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தனசேகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தனசேகரன், அவருடைய மனைவி பவித்ரா, குழந்தை நவனீத் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். காரும் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், தம்பதி காரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தோர், காயமடைந்திருந்த குழந்தையை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Police

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வினய்பாபு (45), என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவர்கள் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web