நீலகிரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. கணவன் பலி.. மனைவி படுகாயம்!
நீலகிரி அருகே 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கணவன் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியினர், இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். இன்று காலை திருமண நிகழ்வுகள் முடிவடைந்ததை அடுத்து கணேஷும், மஞ்சுளாவும் தங்களுக்கு சொந்தமான பொலீரோ காரில் நஞ்சநாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கார், நீலகிரி மலைப்பாதையின் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அருகில் இருந்த 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் பள்ளத்தில் பாய்வதை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் இருந்த கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காரில் படுகாயங்களுடன் சிக்கித் தவித்த மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நீலகிரி மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.