சென்னையில் மீண்டும் பேருந்து விபத்து.. தனியார் நிறுவன ஊழியர் துடி துடித்து பலி!

சென்னையில் அரசு பேருந்தும், வேனும் மோதியதில், வேனில் பயணித்த தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூ பிரதான சாலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தூய்மை பணியாளர்கள், சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் மது போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டியது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று காலை மீனம்பாக்கம் சிக்னலில் அரசு பேருந்தும் தனியார் நிறுவனத்தின் வேனும் மோதி விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. வேனிலிருந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில், நல்வாய்ப்பாக அரசு பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தப்பினர். இந்த விபத்து காரணமாக தாம்பரம் - கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.