திருப்பூரில் கொடூரம்.. முகத்தை சிதைத்து தொழிலாளி படுகொலை!

 
Tirupur

திருப்பூரில் கொலை வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி, முகத்தை சிதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு அருகே உள்ள திருவிக நகர், நாவிதன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக இன்று மாலை திருவிக நகர் முதல் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

திருப்பூர் மாநகரின் முக்கிய வீதியில் முகம் சிதைக்கப்பட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலமுருகனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறிது தூரம் ஓடிச் சென்று மீண்டும் கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கே மோப்ப நாய் வந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாலமுருகன் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், இந்த கொலை சம்பவம் பழிக்குப்பழி வாங்கும் சம்பவமாக நடந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

Police

இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு பகுதியில் கொலை சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web