அக்கா கணவரை அடித்து கொலை செய்த மைத்துனர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

 
Thiruvallur

பெரியபாளையம் அருகே அக்காவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்த அக்கா கணவரை மைத்துனன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்து உள்ள வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40). கூலி தொழிலாளியான இவருக்கு சியாமளா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததோடு தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Thiruvallur

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஜெயபிரகாஷ் தாக்கியதில் சியாமளவிற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு தையல் போட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு தனது மகனுடன் தாய் வீட்டிற்குச் சியாமளா சென்று விட்டார். கடந்த செவ்வாய்க் கிழமை மாலை தனது நண்பர்களுடன் மது அருந்திய ஜெயபிரகாஷ் சிறிது நேரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்த ஜெயபிரகாஷ் அவரது மைத்துனர் அருள் என்பவருடன் மது அருந்தியது தெரியவந்தது. இதனையடுத்து அருளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 Periyapalayam PS

இதில், தனது அக்காவை அடித்ததால் ஆத்திரத்தில் தனது நண்பனுடன் சேர்ந்து போதையில் இருந்த மாமாவை அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மைத்துனர் அருள் (37), அவரது நண்பர் முனியாண்டி (37) ஆகிய இருவரையும் பெரியபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web