தற்கொலை செய்ய மதுவில் விஷம் கலந்த அண்ணன்.. தம்பியுடன் குடித்த நண்பர் பலி.. சேலத்தில் அதிர்ச்சி!

 
salem

சேலத்தில் சயனைடு கலந்து வைத்திருந்த மதுவை குடித்த தொழிலாளி இறந்ததும், அவருடைய நண்பர் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்தவர் தசீர் உசேன். வெள்ளி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகள் உள்ளார். வேலைக்கு செல்லும் தசீர் உசேன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மனைவி கிச்சிப்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் இனிமேல் உன்னோடு சேர்ந்து வாழ முடியாது என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தசீர் உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவை வாங்கி அதில் வெள்ளி தொழிலில் பயன்படுத்தும் சயனைடை கலந்து வைத்திருந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருந்த தசீர் உசேன், ஒருமுறை மனைவியிடம் பேசி பார்க்கலாம் என நினைத்து சயனைடு கலந்த மதுவை யாருக்கும் தெரியாமல் வீட்டில் பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார்.

Suicide

இதனிடையே தசீர் உசேனின் தம்பியான கார் டிரைவர் சதாம் உசேன் (32) நேற்று முன்தினம் இரவு தனது அண்ணனின் வீட்டிற்கு சென்றார். அங்கு அண்ணன் வழக்கமாக மதுபாட்டிலை பீரோவுக்கு அடியில் மறைத்து வைப்பது வழக்கம் என்பதால் மதுபாட்டில் ஏதேனும் இருக்கிறதா? என சதாம் உசேன் பார்த்தார். அப்போது அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்து கொண்டு நண்பரும், தொழிலாளியுமான அசேன் (39) என்பவருடன் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் பாரில் அமர்ந்து மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சதாம் உசேனுக்கும், அசேனுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த பாரில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Salem Town PS

இந்த நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சதாம் உசேனின் நண்பரான அசேன் பரிதாபமாக உயிரிழந்தார். அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சதாம் உசேனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்த தசீர் உசேனை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web