அண்ணன் அடித்து கொலை... தம்பி துடிதுடிக்க வெட்டிக்கொலை ... தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Thoothukudi

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவில் வசித்து வருபவர் பிச்சைக்கண்ணு. இவரது மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். 

murder

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனால் கடையில் இருந்த 2 பெண் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கோரம்பள்ளம் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் பழிக்குபழியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே சிவா என்ற சிவகுமார் படுகொலை செய்யப்பட்டார். 

Thoothukudi Sipcot PS

இந்த வழக்கு சம்பந்தமாக சிறையில் இருப்போர் ஜாமினில் வெளியில் வர முடியாத வகையில் படுகொலை செய்யப்பட்ட சிவகுமாரின் அண்ணன் வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் முறையீடு செய்து வந்தாராம். இந்த நிலையில் இன்று வழக்கறிஞர் முத்துகுமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பட்டப் பகலில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web