திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்.. விரக்தியில் ப்ளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு அருகே திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் ப்ளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடைய 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ்-1 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் அந்த மாணவியும், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவியின் தாய் மகளை கண்டித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே மாணவி காதலித்த வாலிபரும் அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் மாணவி காணப்பட்டார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.