30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. உயிருடன் மீட்பு.. அரியலூரில் நடந்த பயங்கரம்!
ஜெயங்கொண்டம் அருகே புறா பிடிக்கச் சென்ற சிறுவன் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று (சனிக்கிழமை) பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பம் விவசாய நில பகுதியில் புறா பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள 30 அடி ஆழமுள்ள நீரில்லாத கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.