தண்டையார்பேட்டை IOC நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து.. ஒருவர் பலி!
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பாய்லர் வெடித்த பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், பாய்லருக்கு அருகில் இருந்த 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்தார். 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.