பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக மீட்பு.. ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு
ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் வாளி நீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் வீரமுத்து. இவரது மகள் சங்கீதா. இவருக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஓராண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை இரவு நேரத்தில் யாரோ துணியில் சுற்றி குளியல் அறையில் உள்ள வாளி நீரில் போட்டுள்ளனர். பாலமுருகன் திருப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் காலையில் எழுந்த தாத்தா வீரமுத்து குழந்தை அழும் சத்தம் ஏதும் இல்லாத நிலையில் குழந்தையை தேட ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
அப்போது அனைவரும் தேடிய நிலையில் குழந்தை குளியல் அறையில் உள்ள வாளியில் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குழந்தை இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி, பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.