கருப்பு பட்டை.. சட்டமன்ற வெளிநடப்பு! எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் பண்ணத் தெரியல்லியா?

 
EPS EPS

கரூர் துயரச் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்நிலையில் நேற்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் கரூர் துயரச் சம்பவம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

கையில் கருப்பு பட்டையுடன் அதிமுகவினர் அவைக்கு வந்திருந்தனர்.  கருப்புப் பட்டையைப் பார்த்த சபாநாயகர் அப்பாவு பி.பி கூடிடுச்சா என்று கேலி செய்யத் தவறவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்காக ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பு இருந்த சூழலில் விஜய் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவே மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

தவெகவினர் வைத்த உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டையே அவையில் பேசிய போதே, எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் செய்யத் தெரியவில்லை என்றே தோன்றியது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடி காட்டப்பட்டது அவருடைய செல்வாக்கை அவரே குறைத்துக் கொண்டதாக இருந்தது. இந்நிலையில் உடற்கூராய்வு பற்றி தவெகவினர் வைத்த ‘ஒரே இரவுக்குள் எப்படி 41 பேருக்கு உடற்கூராய்வு” செய்யப்பட்டது என்ற பொய்யான குற்றச்சாட்டை வைத்த போது, தவெக எம்.எல்.ஏவாகவே மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இதெல்லாம் தெரிந்தே செய்கிறாரா? அல்லது விவரம் இல்லாத ஆர்வக்கோளாறு அரசியல்வாதியாக நடந்து கொள்கிறாரா என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் சற்று நடுநிலையோடு அரசுடன் சேர்ந்து செயல்பட்டு, இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் எப்படி தடுப்பது என்ற கோணத்தில் விவாதம் செய்திருந்தால், எடப்பாடி பழனிசாமி மீது திமுக அதிருப்தியாளர்களுக்கு கூட ஒரு மரியாதை ஏற்பட்டிருக்கும். அதே வேளையில் விஜய் யுடன் பேரம் பேசும் திறனும் அதிகரித்து இருக்கும். இப்போது இவரே வலியப் போய் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது, விஜய் யின் பேரத் திறனைத் தான் அதிகரித்துள்ளது.

இந்த விசயத்தில் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை விட தேர்ச்சி பெற்றவராக உள்ளார், விஜய் கட்சிக்கு நான் என்ன பி.ஆர்.ஓ வா என்று காட்டமாகவே கேட்டார். இன்றைய நிலையில் விஜய் க்குத் தான் அதிமுகவின் தேவை அதிகம். அப்படிப்பட்ட சூழலில் வாலண்டியராக வண்டியேறி தவெக கட்சிக்காரனாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமியை என்னவென்று சொல்வது? இவரெல்லாம் எப்படி 4 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருந்தார் என்ற கேள்வி தான் எழுகிறது.

- ஸ்கார்ப்பியன்

From around the web