தமிழ்நாடு பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

 
BJP

தமிழ்நாடு பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன். பாஜக கட்சியின் சார்பில் தென்தமிழ்நாட்டில் இருந்து முதன் முறையாக வெற்றி பெற்ற இவர், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மனைவி ஜெகதாம்பிகா சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள்கள் நிவேதிதா, சிவநந்தினி. மகன் ராம்பகவத் ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது.

திருவனந்தபுரத்தில் மகன் வீட்டில் வசித்து வந்த வேலாயுதன், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் பாஜக நிகழ்ச்சிகள், கோவில் கும்பாபிஷேகங்கள், திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி, ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரான கருப்புக்கோட்டுக்கு வந்திருந்த நிலையில்,வேலாயுதனுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

BJP

அவரது இறுதி சடங்கு கருப்புக்கோடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (மே 9) காலை 10 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலாயுதன் மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தனது 13-வது வயதில் 1963-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த வேலாயுதன், 1982-ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 1989-ல் 39-வது வயதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனது நிலத்தை விற்றும், கோவில்களில் உண்டியல் அமைத்தும் டெபாசிட் தொகையை கட்டி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

RIP

இருப்பினும் அந்த தேர்தலில் அவருக்கு 4- வது இடமே கிடைத்தது. 1991 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியடைந்த வேலாயுதன், 3-வது முறையாக 1996 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் தென்தமிழ்நாட்டின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டசபைக்கு சென்றார்.

From around the web