பழைய பொருட்களை எரிப்பவர்களே உஷார்.. செல்போன் பேட்டரி வெடித்ததில் கடைக்காரர் கோர பலி!!

காட்பாடி அருகே இரும்பு கழிவுகளை தீ வைத்து எரித்த போது திடீரென வெடித்ததில், பழைய இரும்பு கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள கழிஞ்சூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (45). இவர், கல்புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் கடையை மூடுவதற்கு முன்பு பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது வழக்கம். நேற்று இரவு 8 மணி அளவில் வழக்கம்போல் கடையை மூடுவதற்கு முன்பாக பழைய பேப்பர் உள்ளிட்ட சில பொருட்களை தீயிட்டு எரித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தீயில் எரிந்து கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதில் முகத்தில் படுகாயம் அடைந்த விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார், விநாயகமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோல இரும்பு கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டல்களை தீவைத்து எரியும் போது அருகில் இருக்க வேண்டாம், தங்கள் பாதுக்காப்பை உறுதி செய்து இருக்க வேண்டும். அதேபோல கண்ணாடி பாட்டல்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.