வங்கி பெண் மேலாளர் கழுத்தை அறுத்து படுகொலை.. வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை!!

 
Kiliyanur Kiliyanur

கிளியனூர் அருகே காருக்குள் வங்கி பெண் மேலாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் கூத்தப்பாக்கம் அருகே நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கிளியனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கார் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. 

இதை கண்டதும் அந்த கார் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினார்கள். அதை ஓட்டி வந்த நபர் காரை விட்டுவிட்டு தப்பி இருக்கலாம் என்றும் கருதி காரை போலீசார் சென்று பார்த்த போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, காரின் முன் இருக்கையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தது தான் அதற்கு காரணம். அந்த 

வாலிபர் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஏதோ ஒரு வாகனத்தின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருக்க வேண்டும் என போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், கொலை செய்யப்பட்ட பெண்ணும், வாகனம் முன் பாய்ந்து இறந்த வாலிபரும் ஒரு தனியார் வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் என்பது தெரியவந்தது. 

Kiliyanur

மேலும் வெளியான தகவல்கள் வருமாறு, சென்னை கிழக்கு தாம்பரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபிநாத் (31). இவரது மனைவி சாந்தா பிரீத்தி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தில் சாந்தா பிரீத்தி மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். குடும்பத்துடன் இதே பகுதியில் அவர்கள் வசித்து வந்தனர். கோபிநாத் தனியார் வங்கியின் மரக்காணம் கிளையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வங்கி கிளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு பணிபுரிந்த வங்கி ஊழியரான மதுரா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுராவுக்கு ஏற்கனவே சுரேஷ் என்ற முந்திரி வியாபாரியுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதல் விவகாரத்தை தெரிந்துகொண்ட சாந்தா பிரீத்தி, கணவர் கோபிநாத்தை கண்டித்துள்ளார். அதையும் மீறி மதுராவுடன் கோபிநாத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் மதுரா மேலாளராக பதவி உயர்வு பெற்று ரெட்டியார்பாளையம் கிளைக்கு மாறுதலானார். புதுவை லாஸ்பேட்டையில் உள்ள அவ்வை நகரில் தங்கி இருந்தபடி ரெட்டியார்பாளையம் வங்கி கிளையில் மதுரா வேலைபார்த்து வந்தார். இது அவர்களது கள்ளக்காதலை தொடர்வதுக்கு வாய்ப்பாகி போனது. முன்பை விட அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததையடுத்து இருவரது குடும்பத்திலும் அது புயலை கிளப்பியது. இதுதொடர்பாக கோபிநாத் - மதுரா இடையே அடிக்கடி தகராறு இருந்ததாக தெரிகிறது.

Kiliyanur PS

இந்த நிலையில் நேற்று இருவரும் திண்டிவனம் பகுதிக்கு சென்றுவிட்டு காரில் புதுவைக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கோபிநாத் காருக்குள் வைத்தே மதுராவை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அதன்பின் காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் செய்வதறியாமல் புதுவை - திண்டிவனம் தேசியநெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் ராஜீவ் தடயங்களை சேகரித்தார். இந்தநிலையில் கோபிநாத், மதுரா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி மதுரா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து அவரது கணவர் சுரேஷ் தனது குழந்தையுடன் வந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

From around the web