பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்!
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாபு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தனித்தனியாக, துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன? எப்போது, எங்கு, எப்படி கொலையை அரங்கேற்ற வேண்டும் என திட்டம் தீட்டிக் கொடுத்தது யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான டீமை வழிநடத்தியது யார்? யார் யாருக்கு தொடர்பு உள்ளது? பின்னணியில் பெரிய கை ஏதேனும் உள்ளதா எவ்வளவு பணம் கைமாறியது? என்பன போன்ற கிடுக்கிபிடி கேள்விகளால் 11 பேரையும் தனிப்படை போலீசார் துளைத்தெடுத்து வருகின்றனர்.
கைதானவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை இன்று காலை 5.30 மணியளவில் விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக கூறிய நிலையில் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
#BREAKING | பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சி
— Sun News (@sunnewstamil) July 14, 2024
இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் உள்பட கைதானவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியானது#SunNews | #ArmstrongCase | #Chennai pic.twitter.com/pDDTcZYHvA
அப்போது, ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.