சென்னையில் பகீர்... கடலில் கிடந்த சடலம்... ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த சோகம்!

 
Rummy

17 லட்ச ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விட்டதால் மனமுடைந்து சுரேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (40). இவர் மனைவி ராதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர், பிரிண்டருக்கு இங்க் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிள்ளார். ஆன்லைன் ரம்மியால் 17 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் இவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். கடிதத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் தன்னை அனைவரும் மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார்.

water

மேலும், கடிதத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். “முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கு, தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். தங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷின் மனைவி ராதா, இதுகுறித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

KK Nagar PS

இந்த நிலையில் இன்று மதியம் மெரினா கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மெரினா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மெரினா போலீசார் சந்தேகத்தின் பெயரில் கேகே நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சுரேஷின் மனைவியை அழைத்து வந்த கேகே நகர் போலீசார் சடலத்தை காட்டி அடையாளம் உறுதி செய்தனர். 

கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் கேகே நகர் சுரேஷ் என்பதை அவரது மனைவி ராதா உறுதிப்படுத்தினார். இதையடுத்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web