சத்துணவில் கெட்டுப்போன முட்டை.. சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம்!! பரமக்குடியில் பரபரப்பு

பரமக்குடி அருகே சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சிவானந்தபுரத்தில் நகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இருபாலர் மாணவர்களும் பயின்று வருகின்றனர். இங்கு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் 240 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 128 மாணவர்கள் தினமும் மதியம் சத்துணவு சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளி மாணவ மாணவிகள் வழக்கம் போல சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 12 பேருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் வந்து அவதிப் பட்டுள்ளனர். உடனே 12 மாணவ மாணவிகளையும் ஆட்டோ மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில் மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை கெட்டுப் போயிருந்ததால் மாணவ மாணவிகளுக்கு இவ்வாறு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இதனை கண்டு பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தரம் இல்லாமல் வழங்கியதால் இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரமக்குடி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.