2 நாட்களாக குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை.. சென்னையில் தொடரும் அவலம்!

 
Poonamallee

பூந்தமல்லியில்  பிறந்த சில தினங்களே ஆன பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய நிலையில் உயிருக்கு போராடிய குழந்தையை பெண் ஒருவர்மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ராமானுஜ கூட தெருவில் தனியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பூனை குட்டி கத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று சத்தம் அதிகமானதையடுத்து யுவராணி என்ற பெண் தனது வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

அப்போது பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் துணி இல்லாமல் குப்பைத் தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் இருந்த பெண் குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

Poonamallee

அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

மேலும் குழந்தையை இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கு வீசி சென்றதும் இரண்டு தினங்களாக குழந்தை அழுதபடி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Poonamallee

இந்த நிலையில் அக்குழந்தையை மீட்ட யுவராணி, அந்த குழந்தை இரு நாட்களாக போராடி அதிர்ஷ்டவசமாக தப்பியதால், அதிர்ஷ்ட லட்சுமி என பெயர் சூட்டி மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக கடந்த ஜனவரி 13-ம் தேதி, சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குப்பையில், 7 மாத குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. அதேபோல், கடந்த ஜனவரி 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web