பால்கனியில் தவறி விழுந்த பச்சிளங் குழந்தை.. போராடி மீட்ட மக்கள்.. திக் திக் வீடியோ!
![Chennai](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/953371f1a649f81c2dbf52fb84c3cb1f.jpg)
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை குடியிருப்பு வாசிகள் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் ஒரு வயதுடைய குழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து தாவி குழந்தை ஒன்று சன் சைடில் விழுந்துள்ளது. அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீடியோவில் காணப்படவில்லை. பால்கனியில் இருந்து தாவி குழந்தை சன் சைடில் சரிந்தபடி கீழே வந்துள்ளது.
இதைக் கண்டு எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். மேற்கூரையின் விளிம்பில் சிக்கிய குழந்தை எந்நேரமும் கீழே விழுவது போல் இருந்தது. குழந்தையை காப்பாற்றுவதற்காக மேற்கூரையின் கீழே குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பெரிய போர்வை ஒன்றை பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த நபர் ஒருவர், ஜன்னல் வழியாக ஏறி தனது உயிரை பணயம் வைத்து கீழே விழவிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டார். அவருக்கு மற்றொரு நபர் உதவி செய்தார். மக்கள் ஒன்றுகூடி குழந்தையை மீட்க போராடிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடையே இது குறித்து சென்னை மாநகர காவல் துறையிடம் விசாரித்த போது இதுபோன்று சம்பவம் நடந்ததாக தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகளிடமும் கேட்டபோது தங்களுக்கு எந்தவிதமான புகார் அல்லது மீட்பு கோரிக்கையும் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் இன்று நடந்த திக் திக் சம்பவம் ♥️ pic.twitter.com/LauC8Z32MD
— Prakash (@Hereprak) April 28, 2024
அதே நேரத்தில் இந்த சம்பவம் ஆவடியில் நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதனை ஆவடி போலீசாரும் உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த குழந்தை தற்போது ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லபடியாக இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். கடவுளின் அனுகிரகத்தாலும், அதிர்ஷ்டத்தாலும் குழந்தை காப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தாயாக அந்த வேதனையை தங்களால் உணர முடிந்ததாகவும், ஹரி என்பவர் தான் அந்த குழந்தையை காப்பாற்றியதாக கூறினர்.