ஆட்டோமேட்டிக் கியர் கார்.. கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்து.. கோவையில் பரபரப்பு!

சிங்காநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார். இவர், கத்தார் நாட்டில் தகவல் தொழில்நுட்ப என்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சூலூரில் உள்ள வீட்டிற்கு வந்த சூரியகுமார் சிங்காநல்லூர் பகுதியில் என்ற காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் காரில் ஆக்சிலேட்டரை வேகமாக அமுக்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளில் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், காரில் இருந்த சூரியகுமார் லேசான காயம் அடைந்து உயிர் தப்பினார்.
மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தினேஷ்குமார் (23) மற்றும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சிந்துஜா (23) என்ற இரண்டு பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிககப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை மீட்டு, சூரியகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சூரியகுமாரின் தந்தை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்த்து விட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.