கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு.. பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்!

 
Kodaikanal

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கை எழில் நிறைந்த மலைகள், நட்சத்திர ஏரி, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டு ரசிக்கின்றனர்.

Kodaikanal

இந்த நிலையில், கொடைக்கானல் மலை பகுதி முழுவதுமாகவே பிளாஸ்டிக் பாட்டில்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே முழுமையாகவே தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடைப்படையில் கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழி பாட்டில்கள் வைத்திருந்தால் அவர்களது பாட்டில்களை பறிமுதல் செய்து ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. தற்போது இன்று முதல் அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இன்று கொடைக்கானல் நகராட்சி சுகாதார பிரிவை சேர்ந்த அதிகாரிகள் முதற்கட்டமாக இன்று கொடைக்கானலில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் கொடைக்கானலுக்கு வரக்கூடிய கேரளா பேருந்துகளில் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Kodaikanal

கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் ஒரு பாட்டிலை பறிமுதல் செய்தால் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வீதம் அபராதம் விதிக்கப்படும் என அவர்கள் கடுமையாக தெரிவித்தனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கக்கூடிய தனியார் விடுதிகள் மற்றும் பேருந்துகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

From around the web