இனி மேலும் ஆம்புலன்ஸ் ஐ தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! அதிமுகவினருக்கு என்ன சொல்லப் போகிறார் எடப்பாடி பழனிசாமி!!

 
Ambulance Ambulance

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீதும் ஆம்புலன்ஸ் மீதும் ஒரு நபர் தனியாகவோ, கூட்டமாகவோ மற்றும் எந்த ஒரு அமைப்பின் மூலமாகவோ அரசு அவசர கால ஊர்தியின் மீதோ அல்லது பணியாளர்கள் மீதோ வன்முறையில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுவதோடு சொத்துக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையும் நீதிமன்றத்தின் மூலமாக அபராதத்துடன் செலுத்த நேரிடும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தன்னுடைய பிரச்சார கூட்டத்தின் இடையில் ஆம்புலன்ஸ் வருகிறது. இது திட்டமிட்டு தமிழக அரசு செய்யும் செயல் என்று குற்றம்சாட்டியதோடு, இனிமேல் என்னுடைய கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால், வந்த ஆம்புலன்சிலேயே டிரைவர் நோயாளியாக செல்வார் என்று எச்சரித்து இருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்து, துறையூர் மையப்பகுதியான அண்ணா பஸ் நிலையம் முன்பும், திருச்சி-துறையூர் சாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்காக திட்டமிடப்பட்டு, அங்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி அதிலிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாகனத்துக்குள் நோயாளி இருக்கிறாரா என கட்சியினர் சோதனை செய்தனர். அப்போது நோயாளி இல்லாததை பார்த்ததும், ஆத்திரமடைந்து கூச்சலிட்ட அதிமுகவினரிடம், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நோயாளியை ஏற்றுவதற்காக செல்வதாக கூறியும் அதிமுகவினர் சமாதானம் அடையவில்லை. அத்துடன் சிலர் ஆம்புலன்ஸ ஓட்டுனரை தாக்கி உள்ளனர். 

அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினரின் ஆம்புலன்ஸ் தாக்குதல் சம்பவம் பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

கட்சியினருக்கு என்ன சொல்லப் போகிறார், அடுத்தடுத்த கூட்டங்களில் வரும் ஆம்புலன்ஸ்க்கு அதிமுகவினர் வழிவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web