ஒன்றிய அரசு நிலுவைத் தொகையைத் தரச் சொல்லுங்க!! வானதி சீனிவாசனுக்கு தங்கம் தென்னரசு பதில்!!

 
Thangam Thennarasu

தமிழ்நாடு அரசின் கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.கடன் வாங்கும் முதன்மை மாநிலமாக இருப்பதில் இருந்து மாற்று ஏற்பாட்டுக்காக செல்லும் தொலைநோக்குப் பார்வைக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ”மராட்டியத்தில் ஆளும் பாஜ அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகம். தமிழகம் 21% வாங்கியிருந்தால் அங்கு 68 சதவீதம் வாங்கியிருக்கின்றனர். கர்நாடகாவில் பாஜ அரசு இருந்த போது அதனுடைய கடன் சதவீதம் 86.6 இருந்தது. ஏற்கனவே நான் கூறியது போல, இந்தியாவில் ரூ.181 லட்சம் கோடிக்கான கடனை பா.ஜனதா ஆட்சி வாங்கி எதற்கெல்லாம் செலவழிக்கிறார்களோ, அதுபோலத்தான் நாங்களும் செலவழிக்கிறோம். தமிழக பெண்களுக்கு இந்த அரசு ஏதாவது நன்மையை செய்யும்போது, ஒரு பெண்ணான நீங்களே அதை தாழ்வாகக் கருதுவது எனக்கு வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

இதற்குப் பதில் கூறிய வானதி சீனிவாசன்,”பெண்களுக்கு வழங்கும் தொகையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மற்ற மாநிலங்களுக்கு நான் சென்று வரும் நிலையில் எனக்கு தமிழகத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. ஆனால் அதற்கான பாராட்டு என்பது உங்களுக்கு மட்டுமல்ல, அது எல்லாருக்கும் பொதுவானது”என்று சொன்னார்.

வானதி சீனிவாசனின் பதிலைக் கேட்ட தங்கம் தென்னரசு . ”நீங்கள் அவல் கொண்டு வாருங்கள், நான் உமி கொண்டு வருகிறேன், 2 பேரும் ஊதி ஊதி தின்போம் என்ற பழமொழி போல் வானதி பேசுகிறார். அவர் உமி மட்டும் கொண்டு வந்துவிட்டு, எங்களுடன் சேர்ந்து பாராட்டை எடுத்துக் கொள்வார்களாம். அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமாம்” என்றுமிகவும் கடுமையான பதிலைச் சொன்னார்

இடைமறித்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ‘அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என்று வரிசையாக வந்த முதல்வர்கள் எல்லாருக்குமே பங்கு என்ற அர்த்தத்தில் வானதி கூறினார்’ என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு “நீங்கள் கூறியவர்களால் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வேன். இதில் நீங்கள் ஏன் வருகிறீர்கள்? உங்களுக்கு என்ன பங்கு உள்ளது?. ஒவ்வொரு நிதிக்குழுவும் நமக்கு வர வேண்டிய நிதிப்பங்களிப்பை குறைத்துக் கொண்டே வருகின்றனர். இப்படி குறைத்து கொண்டே வரும் காரணத்தினால் நமக்கு வர வேண்டிய ரூ.2.63 லட்சம் கோடி இதுவரை வராமல் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் உரிமையையும், மொழி உரிமையையும், மொழிக் கொள்கையையும் விட்டுக் கொடுத்துவிட்டுதான், சமரசங்கள் செய்துகொண்டுதான் இந்த தொகையை நாங்கள் பெற வேண்டும் என்றால் இந்த அரசு அதற்கு ஒரு போதும் தயாராக இருக்காது.”என்று அதிரடியாகக் கூறி விவாதத்தை நிறைவு செய்தார்.

From around the web