கலைஞரின் கனவு இல்லம்திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள்.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
House scheme

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில், நிதியமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது.

அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின. இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பி.பொன்னையா இன்று வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.

House scheme

இதுகுறித்து ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையடுத்து, இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரடி ஆர்.சி.சி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாகவும் பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.

House

ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது. ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகளை கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.

இந்தக் குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களை சேர்க்க வேண்டும். வழிகாட்டுதல்கள் அந்த அடிப்படையில், வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை வட்டம் மற்றும் கிராம அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேணடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web