பொத்தூர் கொண்டு வரப்பட்டது ஆம்ஸ்ட்ராங் உடல்.. வழிநெடுகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்!

 
Armstrong

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில், அடக்கம் செய்யும் இடமான பொத்தூருக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோவில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் கைது செய்து அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யவும், அங்கு கல்லறை எழுப்பவும் அனுமதி கோரி மாநகராட்சியில் முறையிடப்பட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அது தொடர்பான ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. இன்று காலை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு வழக்கறிஞர், “தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது” என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு, “தேமுதிக அலுவலகம் பரந்த இடம், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருப்பது குடியிருப்பு பகுதி, சாலை குறுகலானது” என்று வாதிட்டது.

Armstrong

இதையடுத்து, நீதிபதி பவானி சுப்பராயன், சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த மூன்று மாற்று இடங்களில் தற்போது உடலை அடக்கம் செய்யலாம் என பரிந்துரைத்தார். அதோடு, அப்பகுதி குறுகிய சாலையுடன் கூடிய குடியிருப்பு பகுதியில் உள்ளதால், கட்சி அலுவலக வளாகத்திற்குள் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

கட்சி அலுவலக நிலத்தின் பரப்பளவு சுமார் 2,400 சதுர அடியில் மட்டுமே இருந்தது, அதில் ஒரு மேற்கட்டுமானம் ஏற்கனவே உள்ளது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள் என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி பவானி, கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்யலாம். பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலலகத்தில் மணி மண்டபம் கட்ட எந்த பிரச்சனையும் இல்லை, அரசு அனுமதியுடன் பெரம்பூர் கட்சி அலுவலுகத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.


நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், உடலை பள்ளி மைதானத்தில் இருந்து இன்றே எடுத்தாக வேண்டும் நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார். மேலும் உடல் எடுத்துச் செல்லப்படும் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட செங்குன்றம் அருகே பொத்தூரில் உள்ள ரோஜா நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், கலந்துகொண்டு வழி நெடுகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மழைக்கு இடையே பொத்தூர் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. இறுதி ஊர்வலம் தொடங்கி 3 மணி நேரமாகியும் இதுவரை சுமார் 5 கி.மீ தூரத்தை மட்டுமே கடந்துள்ளது. இன்னும் 16 கி.மீ தூரம் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web