ஆம்ஸ்ட்ராங்கை சதக் சதக்கென வெட்டிய ரவுடி கும்பல்.. அதிர்ச்சியூட்டும் CCTV காட்சி

 
Armstrong

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி திருவேங்கடம் வெட்டிக் கொல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தனித்தனியாக, துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ரவுடி திருவேங்கடம்தான் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் அவர்தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை திருவேங்கடம் தனது வீட்டருகே வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை மாதவரம் ஆட்டுதொட்டி அருகே உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Armstrong

அப்போது அவர்களிடம் இருந்து தப்பியோடிய திருவேங்கடம், வெஜிடேரியன் பகுதியில் ஒரு தகர கொட்டகைக்குள் மறைந்திருந்தார். அங்கு அவர் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸாரை சுட முயற்சித்தார். துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அதை மதிக்காமல் போலீசாரை நோக்கி திருவேங்கடம் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து தற்காப்புக்காக திருவேங்கடத்தை என்கவுன்ட்டரில் சுட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி திருவேங்கடம் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. குறுகலான பாதையில் ஜல்லியையும் சிமென்ட்டையும் கலக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.


அங்கு ஒரு பெண் ஆள் வேலை செய்கிறார். அந்த கலவை கலக்கும் இயந்திரம் அருகே ஒரு ஆண் ஆள் நிற்கிறார். ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பிய திருவேங்கடம் அவரை சரமாரியாக வெட்டுகிறார். உடனே அவருடன் இருந்தவர்களை துரத்திய மர்ம கும்பல், திடீரென உணவு டெலிவரி ஆடை அணிந்து கொண்டு விஜய், திருமலை ஆகியோர் அரிவாளுடன் ஓடி வந்து வெட்டுகிறார்கள்.

பிறகு கோகுல், மணிவண்ணன் ஆகியோர் வந்து அவர்களு்ம ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டுகிறார்கள். இதனால் அந்த இடமே களேபரமாகும் நிலையில் அங்கிருந்த சித்தாட்களையும் வெட்டுவதற்காக விஜய் துரத்திக் கொண்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியும் ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த நாற்காலியை வெட்டுகிறார். பின்னர் ஆளுக்கு ஒரு மூலைக்கு தப்பி செல்கிறார்கள்.

From around the web