ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. அடுத்தடுத்து சிக்கும் கட்சி நிர்வாகிகள்.. பாஜக நிர்வாகிக்கு வலைவீச்சு!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக மகளிர் அணி செயலார் புளியந்தோப்பு அஞ்சலையை பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் பெண் வழக்கறிஞரான மலர்க்கொடி, பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவி ஆவார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் அருள் என்பவரோடு மலர்க்கொடி தொடர்பில் இருந்துள்ளார்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவரும் அருளுக்கு உதவி செய்ததாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன் பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பு அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தோழி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரிடம் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரை புனித தோமையார் மலையில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.