பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? ரயிலில் டிக்கெட் முன்பதிவு 12-ம் தேதி தொடக்கம்

 
Pongal

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, அங்கு தனது உற்றார் உறவினர்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி செல்வார்கள்.

குடும்பத்துடன் செல்வதால் ரயிலில் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய நினைத்தால் படாத பாடு படவேண்டியிருக்கும். பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். ரயில்களில் தற்போது 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன்படி, பார்த்தால் வரும் பொங்கலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதாவது 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.

15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கள் கிழமை வருகிறது. இதனால், நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள். இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி முதல் தொடங்குகிறது.

அந்த வகையில், ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ம் தேதியும், ஜனவரி 11-ம் தேதிக்கு பயணம் செய்ய 13-ம் தேதியிலும், ஜனவரி 12-ம் தேதிக்கு வரும் 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

From around the web