என்னை விட்டு பிரிய போகிறாயா..? மணப்பெண்ணின் சேலையை பிடித்து விடாத நாய்.. வைரலாகும் வீடியோ..!

 
Nagercoil

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு புறப்பட்ட மணப்பெண்ணை பிரிய மறுத்து வளர்ப்பு நாய் பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நாகர்கோவிலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான். பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடவுள் படைத்த ஜீவராசிகளிலேயே நன்றியுடன் விசுவாசத்திற்கு எப்போதும் உதாரணமாக காணப்படுவது நாய்கள் மட்டுமே. நாய் போல் நன்றி உள்ளவனாக இரு என்று மனிதர்கள் அறிவுரை கூறுவது உண்டு. தன்னை வளர்க்கும் எஜமான் குடும்பத்திற்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் நாயின் பாசத்தை அளவிட முடியாது.

வீட்டுக்குள் ஏதேனும் விலங்குகளோ, பாம்புகளோ புகுந்தால் அவற்றை விரட்டியடித்து சில நேரங்களில் தன் உயிரை கொடுத்து எஜமான் குடும்பத்தை நாய் காப்பாற்றிய சம்பவத்தை கேள்வி பட்டிருப்போம். திருமணம் முடிந்ததும் மணப்பெண் புதுமாப்பிள்ளையுடன் புகுந்த வீட்டுக்கு செல்வதை கவனித்த ஒரு நாய் மணப்பெண்ணை பிரிய மறுத்து பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

Nagercoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சித்திரை திருமகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியா (21). இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த என்ஜினீயரான அசோக் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே முகிலன்விளையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் சித்திரை திருமகாராஜபுரத்தில் உள்ள மணப்பெண் வீட்டில் இருந்து அவர் புகுந்த வீட்டுக்கு புறப்படும் சடங்கு நடந்தது. அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை கண்ணீர் மல்க அனுப்பினர்.

உடனே வளர்ப்பு நாயின் அருகே மணப்பெண் சென்ற போது, அந்த நாய் தனது முன்னங்கால்களை தூக்கியும், வாலை பலமாக ஆட்டியும் தனது பாசத்தை வெளிப்படுத்தியது. மணமகளின் மேலே தாவி, தாவி தனது பாச மழையை பொழிந்தது. மேலும் அந்த நாயின் நடவடிக்கைகள் ‘என்னை விட்டு பிரிய போகிறாயா?’ என்கின்ற தொனியில் இருந்தது. சுகப்பிரியாவும் மிகவும் பாசத்துடன் வளர்ப்பு நாயை சமாதானப்படுத்தினார். 


நான் அடிக்கடி நமது வீட்டுக்கு வருவேன், உன்னை பார்க்க கண்டிப்பாக வருவேன் என கண்கலங்கியபடி நாயை கட்டியணைத்து கூறினார். பின்னர் பாசமாக நாயை தடவி கொடுத்தார். ஆனாலும் சமாதானம் ஆகாத நாய் அவரது சேலையை பிடித்து இழுத்து பாசப்போராட்டம் நடத்தி கண்ணீர்விட்டது. இந்த பாசப்போராட்டம், அங்கு திரண்டிருந்த உறவினர்களின் கண்களையும் குளமாக்கியது.

இதுகுறித்து மணப்பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், “கல்லூரி மற்றும் வெளியிடங்களுக்கு சுகப்பிரியா சென்றால் அவர் வருகையை எதிர்பார்த்து வளர்ப்பு நாய் காத்திருக்கும். அவரது இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டதும் கட்டி வைக்கப்பட்ட நிலையிலும் நாய் அங்கும் இங்கும் ஓடி தனது வாலை ஆட்டி பாசத்தை வெளிப்படுத்தும்” என கூறினர். வளர்ப்பு நாயுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டத்தை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

From around the web