ஆளுநர் ஆகிறாரா அண்ணாமலை? அதிமுக - பாஜக கூட்டணி குழப்பங்கள் தீருமா?
அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதலில் வெளியேறினார். இப்போது டி.டி.வி தினகரனும் வெளியேறிவிட்டார். இந்த இருவரும் வெளியே சென்றதற்குக் காரணம் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை என்று பேச்சு அடிபடுகிறது;
எடப்பாடி பழனிசாமியின் அழுத்தத்தால் தன்னுடைய மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது என்ற வருத்தத்தில் அண்ணாமலை இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிட்டால், தன்னுடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அண்ணாமலை கருதுவதால், பாஜக- அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பது தான் அண்ணாமலையின் எண்ணமாம்.
ஓ.பி.எஸ் மற்றும் டி.டி,வி தினகரன் இருவரும் அண்ணாமலையிடம் நல்ல உறவு கொண்டிருப்பவர்கள். அவர்கள் இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதும் பிடிக்காத ஒன்று தானே. ஆக, மூன்று பேரும் ஒரே எண்ணத்தில் இருப்பதால் இவர்கள் மூவரும் ஒரு மறைமுகக் கூட்டணி போல் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ், டி.டி.வி இருவரும் சேர்ந்தால் தெற்கு மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும். இவர்கள் இருவரும் வெளியே சென்றதால் பாதிக்கப்படுவது அதிமுக மட்டுமல்லாமல் பாஜகவுக்கும் சேதாரம் இருக்கும். .டி.டி.வி தினகரனிடம் தான் பேசியதாகவும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டதாகவும் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால் பங்கேற்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் திருமண நிகழ்ச்சியை விட ஒன்றிய அமைச்சர் தலைமையிலான கூட்டத்திற்குத் தான் எந்த ஒரு அரசியல்வாதியும் செல்வார்கள் என்பது அரசியல் அடிப்படை நியதி.
டெல்லியில் அண்ணாமலை மீது புகார்கள் குவியும் என்று தெரிந்ததால் தான் செல்லாமல் தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே போல் டெல்லியில் எக்கச்சக்கமான புகார்கள் அண்ணாமலை மீது முன்னணித் தலைவர்கள் அனைவருமே கொட்டித் தீர்த்துள்ளனர். அண்ணாமலையை தமிழ்நாட்டிலிருந்தே தூக்க வேண்டும் என்று இந்தியில் அமித் ஷா சொன்னதாக ஒரு தகவல் உலவுகிறது.
வடக்கே ஏதாவது ஒரு பொறுப்பு கொடுத்து 2026 தேர்தல் வரையிலும் தமிழ்நாட்டு அரசியலிlலிருந்து அண்ணாமலையை நீக்கி வைக்க வேண்டும் என்று அமித் ஷா முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இல. கணேசன் ஆளுநராக இருந்த நாகலாந்து மாநிலத்தில் பொறுப்பு ஆளுநர் தான் உள்ளார். அங்கே ஆளுநராக அண்ணாமலையை அனுப்பி விட்டால் என்ன என்ற யோசனையும் முன் வைக்கப்படுகிறதாம்.
ஆளுநராக பதவியேற்பவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தான் முன்னர் கருதப்பட்டது. ஆனால் அதை தமிழிசை சவுந்தரராஜன் உடைத்தெறிந்து விட்டார். அவரைப் போலவே சில ஆண்டுகள் நாகாலாந்து உள்பட ஏதாவது ஒரு வட மாநில ஆளுநராக இருந்து விட்டு, பின்னர் அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் அண்ணாமலையை மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் இறக்கலாம் என்ற திட்டம் தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாக ஒரு தகவல் வருகிறது.
அப்போ, அண்ணாமலை ஆர்மி வார் ரூம் எல்லாம் என்ன பண்ணுவாங்க என்பதும் ஒரு கேள்வியாக எழுகிறது
- ஸ்கார்ப்பியன்
