புஸ்வாணம் ஆன அண்ணாமலை - எடப்பாடி போராட்டம்! அமைச்சர் வச்சாரய்யா ஆப்பு!!

மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய இருப்புப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்ட ஒன்றிய அரசையும், திட்டத்திற்கு நிதி ஒதுக்காத தமிழ்நாடு அரசையும் கண்டித்து ஜனவரி 20ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் என்று அறிவித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
ஆஹா, இது நமக்குத் தோணாமப் போச்சே என்று நினைத்தாரோ என்னவோ, இதே ரயில் பாதையை காரணம் காட்டி பாஜக சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.
முன்னதாக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தித் தரவில்லை என்பதால் மதுரை - தூத்துக்குடி இருப்புப்பாதை திட்டம் கைவிடப்பட்டதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார். ஆனால், இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்தார் தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர். நிலம் கையகப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் அமைச்சர் சிவசங்கருக்கு ஒன்றிய அமைச்சர் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணதேவ் கூறியிருந்ததை நம்பி அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் போராட்டத்தை அறிவித்து விட்டனர்.
இந்நிலையில் மதுரை - தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தனுஷ்கோடிக்கு தான் புதிய பாதை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. தனுஷ்கோடி என்பதை தூத்துக்குடி என்று தவறாகச் சொல்லிவிட்டேன் என்று தற்போது கூறியுள்ளார் ஒன்றிய ரயில்வே அமைச்சர்.
அறிவிச்ச போராட்டதை கைவிடுவதா அல்லது வேறு காரணம் சொல்லி நடத்துவதா என்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும்.