கோவையில் இரவு 10 மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை.. எதிர்ப்பு தெரிவித்த திமுகவினரை அடித்து உதைத்த பாஜகவினர்!

 
Coimbatore

கோவையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Coimbatore

அந்த வகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 11) இரவு, கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 10 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் விதிமுறை இருக்கும் நிலையில், அதனை தாண்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த காவல்துறையினரிடம் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள எப்படி அனுமதி அளிக்கின்றீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர். 

இதனை பார்த்த பாஜக தொண்டர்கள் புகார் அளித்த திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த களேபரங்களுக்கு இடையே, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் அண்ணாமலையின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகத் தெரிகிறது. 

Coimbatore

திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், மதிமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மார்பின் மீது தாக்கியதால், அவருக்கு மட்டும் அரசு மருத்துவமனையில் இசிஜி (EGC) எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவலறிந்து, முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று இதுகுறித்து கேட்டறிந்தனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

இது குறித்து பேசிய திமுக நிர்வாகிகள், அண்ணாமலை கொடுத்த சிக்னலின்பேரிலேயே திமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். திமுகவினர், பாஜகவினரோடு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில், காவல்துறையோடு பேசிக் கொண்டிருந்தவர்களை அவர்கள் தாக்கியதாகவும் குற்றம்சாட்டினர். தற்போது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் மீது மூன்று பிரிவுகளின் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

From around the web