அழைக்கின்றார் அண்ணா! கம்பீரக் குரல் நாகூர் ஹனிபா நூற்றாண்டு!!

 
Nagore Hanifa

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. நான் ஹனிபாவின் பாடல்களுடன் வளர்ந்தவன். இப்போதும் ஹனிபாவின் குரல் என் நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சும். அவர் இறந்து 9 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் எங்காவது தி.மு.க நிகழ்ச்சி நடக்கிறது என்றால் நான்கு தெருக்களுக்கு முன்பே அறிவித்துவிடுகிற குரல் ஹனிபாவுடையதுதான். கறுப்பு-சிவப்பு கொடி, கரைவேட்டி, உதயசூரியன் சின்னத்தைப் போல் நாகூர் ஹனிபாவும் தி.மு.க.வின்  பிரிக்க முடியாத அடையாளம்.

ஹனிபாவின் தி.மு.க பாடல்களைப் போலவே அவரது இஸ்லாமியப் பாடல்களும் அற்புதமானவை. 'அழைக்கின்றார் அண்ணா', 'ஓடிவருகிறான் உதயசூரியன்', 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி', 'கற்பூரக்கனல் வார்த்தை' போன்ற பாடல்களில் கட்சி முகம் காட்டும் ஹனிபா 'இறைவனிடம் கையேந்துங்கள்', 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு', 'நபிவழி நடந்தால்...' பாடல்களில் மார்க்க முகம் காட்டுவார்.  ஒருவர் கடவுள் மறுப்பாளராக இருக்கலாம், தி.மு.க.வைப் பிடிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர்களையும் கவர்ந்திழுக்கும் குரல் நாகூர் ஹனிபாவுடையது. அது ஒரு கம்பீரக்குரல். தமிழ்நாட்டில் உச்சஸ்தாயியில் பாடும் சில பாடகர்களில் ஹனிபாவும் ஒருவர். 

'சன்மார்க்கம் தந்த நபி - துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞானப் பெருமான்...' என்னும்போது உச்சத்தில் ஒலிக்கும் ஹனீபாவின் குரல்
'அவர் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்' என்று மறுகணமே இறைஞ்சும் குரலில் நம்மை உருகவைத்துவிடும். கடல் அலைகளைப் போல் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் ஹனிபாவின் குரல் ஒரே நேரத்தில் மனவெழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தவல்லது.

இசைஞானி இளையராஜா ஹனிபாவின் குழுவில் பணிபுரிந்தவர். அவர் அமைத்த மெட்டுதான் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு'. 'செம்பருத்தி', 'ராமன் அப்துல்லா' போன்ற படங்களில் அவரைப் பாடவைத்திருக்கிறார். இளையராஜாவுக்கு முன்பே 'குலேபகாவலி', 'பாவமன்னிப்பு' படங்களின் மூலம் திரையுலகில் கால்வைத்தாலும் ஹனிபாவின் பயணம் பெரிதும் கச்சேரி மேடைகளில்தான். நடிகர்களின் பின்னணி குரலாக ஒலிக்க முடியாத சிக்கல் ஹனிபா குரலுக்கு உண்டு.

யாருக்குப் பின்னணி குரலாக இருந்தாலும் அங்கே நடிகர்களைவிட நாகூர் ஹனிபாதான் நினைவுக்கு வருவார். அசரீரி போல சூழலின் பின்னணிக்குத்தான் அவர் குரல் பெரும்பாலும் ஒலித்திருக்கிறது.  அவர் இசைநிகழ்ச்சியில் பிரமாண்ட இசைக்கருவிகளோ பெருங்கூட்டமாக இசைக்கலைஞர்களோ இருக்க மாட்டார்கள். நான்கைந்து இசைக்கலைஞர்கள், எளிய இசைக்கருவிகள், எல்லாவற்றையும் தாண்டி அதில் முக்கியமானது ஹனிபாவின் குரல் மட்டுமே.

ஹனிபாவின் வாழ்க்கை பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. அவர் மக்கள் மனம் கவர்ந்த பாடகராக இருந்தபோதும் தேர்தலில் வென்றதில்லை. சட்ட மேலவை உறுப்பினராகவும் வக்பு வாரிய தலைவராகவும் இருந்திருக்கிறார். 

நாடகத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா முன்பு நடித்துக்காட்டி அவரையும் கவர்ந்து நாடகக்குழுவிலும் சேர்ந்துவிட்டார் குடும்பத்துக்குத் தெரியாமலே. பிறகு அவரது சகோதரர் தேடிக் கண்டுபிடித்து அவரைத் திரும்பவும் அழைத்துப்போயிருக்கிறார்.

1955ல் சென்னை வானொலி நிலையம் 'ஆகாசவாணி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டபோது 'தமிழர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் புறக்கணிக்க வேண்டும்' என்ற கி.ஆ.பெ.விசுவநாதத்தின் வேண்டுகோளை ஏற்று, அதற்குப்பிறகு வானொலி நிகழ்ச்சிகளில் ஹனிபா பாடுவதில்லையாம்.

1940ல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் சர்.பன்னீர்செல்வம் மறைவுக்கு இரங்கல் கீதம் பாடியவர் நாகூர் ஹனிபா. அதைப் பற்றிச் சொல்லும்போது ''பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் வந்திருந்தாங்க. டர்பன், சரிகைத்துண்டுன்னு அவர்கள் உடைகளாலேயே மேடை ஜொலிக்கும். அந்த மேடையிலேயே எளிமையாக லுங்கி கட்டி இரண்டு பேர் மட்டும் தனித்து தெரிவோம். ஒன்று நான். இன்னொன்று தந்தை பெரியார்' என்கிறார்.

1938ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டி கைதானபோது ஹனிபாவின் வயது 13. சிறுவன் என்பதால் அவரைக் காவல்துறையினர் சிறைக்கு அனுப்பவில்லை. ''ஹனிபா ஐயாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை'' என்று பாராட்டியவர் பெரியார். ஹனிபாவுக்கு 13 வயதாக இருந்தபோது பெரியாரின் வயது 60. 47 வயது குறைவானவர் என்றபோதும் அவரை ஐயா என்றே பெரியார் அழைத்தார்.

எல்லாவற்றையும் விட ஆச்சர்யம் இறுதிவரை இறை நம்பிக்கை கொண்டிருந்த நாகூர் ஹனிபா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் பயணத்தைத் தொடங்கி இறுதிவரை தி.மு.க.வில் இருந்து மறைந்தவர். கடவுள் மறுப்பைவிட சுயமரியாதை, சமூகநீதி, மொழியுரிமை போன்றவை மீது திராவிட இயக்கம் அக்கறை காட்டியதன் அடையாளம்தான் ஹனிபா.

'செம்பருத்தி' திரைப்படத்தில் அவர் பாடிய 'நட்டநடுக் கடல் மீது' பாடலில் வரும் வரிகள் இவை...

''வந்தவர்கள் போவார்கள் - போகாது காதல்
வங்கக்கடல் மீது ஆணை - சாகாது காதல்''

இந்த வரிகள் காதலுக்கு மட்டுமல்ல, இசைமுரசு நாகூர் ஹனிபாவின் குரலுக்கும் பொருத்தமானவைதான்.

- சுகுணா திவாகர்

From around the web