நீட் எதிர்த்து உயிரை மாய்த்த அனிதா... மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

 
MKS-Anitha

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், ஒன்றிய அரசு, மருத்துவ சேர்க்கையினை 12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால் மனமுடைந்தார். 

ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளை பெறுவது சாத்தியமில்லை என்பதையும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Ariyalur

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா கடந்த 2017 செப்டம்பர் 1-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது.

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் 2022 ஜனவரி 12அன்று தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் இந்தியப் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

MKS

இந்த நிலையில், அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் அனிதா நினைவு அரங்கத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

From around the web