அன்பில் மகேஷ் ஆதரவு... கவிஞர் சல்மாவுக்கு கிடைக்குமா மணப்பாறை?

திமுக திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதியை கடந்த மூன்று தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி வருவதால் 2026 தேர்தலில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று உடன்பிறப்புகள் தலைமைக்கு அழுத்தம் தரத் தொடங்கியுள்ளனர்.
2011-க்கு முன்பு வரை மணப்பாறை நகராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதியுடன் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பின் போது, மருங்காபுரி தொகுதி கலைக்கப்பட்டு மணப்பாறை புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் பெருமளவில் இருந்த போதும். தொகுதி உருவான முதல் தேர்தலிலேய அதிமுக தொகுதியைக் கைப்பற்றிவிட்டது. 2016லும் அதிமுகவின் சந்திரசேகரே மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.
2021ம் ஆண்டு மணப்பாறை தொகுதியை மனித நேய மக்கள் கட்சிக்கு கொடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார். முந்தைய தேர்தல்களில் 2016ம் ஆண்டு இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கும், 2011ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கியிருந்தனர்.
இந்நிலையில் 2026ம் ஆண்டு தேர்தலில் மணப்பாறையில் திமுக போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் அழுத்தம் தரத் தொடங்கியுள்ளனர். மாவட்டச்செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மணப்பாறை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் திமுகவினரே போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த கவிஞர் சல்மா திமுக வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராக இருந்த கவிஞர் சல்மா 2006ம் ஆண்டு மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு மணப்பாறை தொகுதி தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் 2021ம் ஆண்டு மண்பாறை தொகுதியில் கவிஞர் சல்மா போட்டியிட வேண்டும் என்று கட்சியினரிடம் கோரிக்கை வலுத்து வருகிறது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற கவிஞர் சல்மாவுக்கு அமெரிக்க திமுக சார்பில் பல நகரங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு திமுகவினரும் கவிஞர் சல்மா 2026 தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம தெரிவித்துள்ளனர். முன்னதாக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி யின் ஆதரவாளராக அறியப்பட்ட கவிஞர் சல்மா. மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவைப் பெற்றவராகியுள்ளார். கவிஞர் சல்மாவின் வாட்ஸ் அப் டி.பி.யில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷுடன் இருக்கும் புகைப்படமே இடம்பெற்றுள்ளது.
மேலும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிகழ்ச்சிகள் அனைத்திலும் அமைச்சர் அன்பில் மகேஷுடன் தவறாமல் பங்கேற்று வருகிறார் கவிஞர் சல்மா. இதையெல்லாம் பார்க்கும் மணப்பாறை தொகுதி உடன்பிறப்புகள் அடுத்த எம்.எல்.ஏ அக்கா சல்மா தான் என்று பேசத் தொடங்கியுள்ளனர். தொகுதிக்கு தொடர்பில்லாத தற்போதைய எம்.எல்.ஏ அப்துல் சமதுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அது எதிரணிக்கு சாதகமாகிவிடும் என்றும் கட்சியினர் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி என்று கூறப்படும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவைப் பெற்றுள்ள சிறுபான்மையினரான கவிஞர் சல்மாவுகே மணப்பாறையில் வாய்ப்பு என்ற பேச்சு உலவத் தொடங்கியுள்ளது. கவிஞர் சல்மாவுக்கு வெளிநாடு வாழ் திமுகவினரின் ஆதரவும் பெருகியுள்ளதால் அங்கிருந்தும் கட்சிக்கு மனுக்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.எ